Total Pageviews

Monday, March 3, 2014

முன்னுரை !!

திருப்புகழ் விளக்கம்

---அருணகிரிநாதர் அருளியவை ---
          உள்ளார்ந்த மறைபொருள்கள் 

முருகன் என்றால் அசுரர்களை அழித்து தேவர்களை , பக்தர்களை காக்கிறவர் என்பது தமிழ் மறை !!

முருகு என்றால் மாறி வருதல் என்பது பொருள் !
விண்ணில் தேவர்கள் அசுரர்களால் அடக்கி ஒடுக்க பட்டு மண்ணிலும் மனிதர்கள் அசுர மாயங்களால் பீடிக்க படும்போது அதை விடுவிக்க தேவதூதன் --வாணவர் என்ற நிலையிலிருந்து மனிதனாக மாறி வருகிற கடவுளின் பிரதிநிதி --குமாரன் என்பது !
அந்த குமாரன் ஞானத்தை ஆயுதமாக கொண்டவர் ! சூரணனின் பல வகையான மாயைகளை அழித்தவர் ! மனிதர்களுக்கு சற்குரு !
குரு என்றால் மனிதனுக்கும் கடவுளுக்கும் பாலமானவர் ! அல்லது வழி காட்டி !
நமக்கு ஒன்றை கற்றுத்தந்தவர்கள் எல்லோரும் உபகுரு !
சற்குருவோ எல்லா அறிவிற்கும் ஞானத்திற்கும் ஊற்றுகண்ணாக இருந்து கடவுளை காட்டி கொடுக்கிறவர் !
அர்ணகிரி நாதர் அவரை அநுபூதி நிலையில் உணர்ந்து பாடியவை ஞான மறை பொதிந்த பக்தி பாமாலையாகும் ! அவைகளின் பொருளை உணர்ந்து அனுபவித்தால் அனுபூதியடையலாம் ! அப்படி சிலவற்றை இங்கு தருகிறேன் !

கந்தர் அனுபூதி -18





இந்தப்பிலேயரிலும் கேட்கலாம் :

https://ia601502.us.archive.org/31/items/TrackNo081/Track%20No08_1.ogg



உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூ ரபயங் கரனே

உதியா மரியா --பிறப்பு இறப்பு அற்றவன் !
கடவுளும் அவரால் நித்திய ஜீவன் அருளப்பெற்ற தேவதூதர்கள் மட்டுமே பிறப்பு இறப்பு அற்றவர்கள் !!

உணரா மறவா --- இருமைகளை கடந்த யோகம் கைவரப்பெற்ற நிலை !

இன்பம் துன்பம் ; விருப்பு வெருப்பு ;  புகழ் அவமானம் ; செயல் செயலின்மை ; வெற்றி தோல்வி போன்ற இருமைகளே அசுரர்களின் மாயைகளுக்கு அடிப்படையானவை ! இந்த மாயைகளுக்கு அப்பாற்பட்டவன் ! நிர்க்குணமானவர் கடவுள் ! அவரால் ஞானம் அருளப்பட்டவர்களும் நிர்க்குண நிலையை அடைவார்கள் !

விதிமாலறியா விமலன்  --எந்த வரையறைக்கும் அப்பாற்பட்டவர் கடவுள் !

புதல்வா --குமாரன் --கடவுளின் பிரதினிதியாய் பூமிக்கு வருகிறவர் !

அதிகா வநகா வபயா--மேலானவனே, பாவபுண்ணியமற்றவனே, பயமற்றவனே !

வமரா பதிகா வலசூ ரபயங் கரனே --- தேவர்களின் இருப்பிடமான அமராவதியினை காப்பவனே, அசுரனாகிய சூரனுக்கு பயத்தை தருபவனே !

யோகத்திலும் ஞானத்திலும் வளர்வோருக்கு கடவுளை தேடுவோருக்கு அசுரர்கள் பல வகையான மாயைகளை கொணர்ந்து தடைகளையும் உபத்திரவங்களையும் கொடுப்பார்கள் ! அதை அழித்து ஞானத்தை கொடுக்கும் குரு --கடவுளின் பிரதினிதி ! கடவுளுக்கும் மனிதனுக்கும் பாலமாய் இருப்பவன் ! ஞான வேல் உள்ளவன் !

குரு -- இறைதூதர்களில் இரண்டு வகை உண்டு ! மனிதன் குருவாய் உயர்வது ! தேவதூதன் பூமிக்கு வருவது ! தூதர்களில் மனித தூதர் ; மலக்கு தூதர் என இரண்டு வகை தூதர்கள் பூமிக்கு வந்ததாக குரானும் குறிப்பிடுகிறது !

 குரான் 22:75. : அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்.

முருகு என்றால் மாறி வருகிறவர் என்றொரு பொருள் உண்டு !

கடவுளின் பிரதினிதியாக தேவதூதன் என்ற நிலையிலிருந்து மனிதனாக மாறி பூமிக்கு வந்து அசுரர்களின் கிரியைகளை அழிக்கிறவர் முருகன் !! யுகங்கள் தோறும் பூமிக்கு வருகிற மலக்கு தூதன் !--யுக புருஷன் !!

கீதை 4:6 நான் பிறப்பற்றவனாகவும்; அழிவற்ற எனது ஆத்துமசரீரம் நித்தியஜீவனுள்ளதாகவும் இருந்தாலும் நான் அதனை தாழ்த்தி யுகங்கள் தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்! எனென்றால் நானே இப்பூமிக்கு கடவுளின் பிரதிநிதியும்; பூமியில்உள்ள அனைத்து உயிரிணங்களின் யுகபுருஷனும் ஆவேன்!!

கீதை 4:7 எப்போதெல்லாம் எப்போதெல்லாம் ஆண்மீக மதிப்பீடுகள் தொய்வடைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் நான் பூமிக்கு இறங்கி வருகிறேன்!!

கீதை 4:8 பக்தர்களை ரட்சிக்கவும் தீமை புரிந்து பூமியில் குழப்பம் செய்வோரை அழிக்கவும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகங்கள்தோறும் யுகங்கள்தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்!!

கீதை 4:9 யார் பூமியில் வெளிப்படும் எனது சரீரத்தின் தோற்றத்தையும்; நித்தியஜீவனுள்ள எனது ஆத்துமாவையும் உணர்ந்து அதன் செயல்பாடுகளில் தன்னை இனைத்துக்கொண்டு ஒத்திசைவாய் வாழ்கிறானோ அவன் இந்த லவ்கீகவாழ்வில் மீண்டும்மீண்டும் அல்லலுறுவதில்லை;மாறாக எனது நித்தியத்தின் மனநிலையை எய்துவான்!! நித்திய ஜீவனை அடைந்து என்னோடுகூட வாசம் செய்வான்!!

கீதை 4:10 பந்தத்திலிருந்தும் பயத்திலிருந்தும் கோபத்திலிருந்தும் விடுபட்டவர்களாய் ;முற்றிலும் கடவுளில் நிலைத்து கடவுளுக்குள் புகலிடம் தேடியவர்களாய் கடவுளை அறிகிற அறிவாலே நிறைய மனிதர்கள் தூய்மை அடைந்தார்கள்!! அதனாலே கடவுளின் நித்திய அன்பிலே நிலைத்தார்கள்!!

கீதை 4:11 என்னிடம் எல்லா விசயங்களையும் கற்றுக்கொண்டு என்னை பின்பற்றி நடந்து கடவுளை முழுசரணாகதி அடைந்தவர்கள் அனைவருக்கும் கடவுள் அவரவருக்கேற்ற கூலியை வழங்குவார்!!

அப்படி பூமிக்கு வந்தவர்கள் !

திரேதா யுகத்தில் ராமன் --ராமன் என்றாலேயே குமாரன் --புதல்வன் என்பது பொருள் !

துவாபர யுகத்தில் கிருஸ்ணர் ! --காண்கிறவர் என்று பொருள் ! மனித மனத்தின் பல்வேறு தளைகளையும் குழப்பங்களையும் துன்பங்களையும் கண்டு அதிலிருந்து விடுபட 18 யோக வழிமுறைகளை --கீதையாக தந்தவர் !

இன்று மக்கவாக இருக்கும் இடம் பாலைவனமாக இருந்தபோது கையிலிருந்த பச்சிளம் குழந்தை இஸ்மாயில் தண்ணீரிலாமல் சாகப்போகும் நிலையில் அதன் தாயார் ஹஜிரா தன்னந்தனியாய் அழுதபோது தேவதூதன் ஒருவர் தோன்றி நீரூற்று ஒன்றை உற்பத்தி செய்தார் ! அவரை ``எல்ரோயி ``-- காண்கிறவரே -- கிருஸ்ணரே என்றே ஹஜீரா அழைத்தார்கள் !

கலியுகத்தில் இயேசு ! --- விடுவிக்கிறவர் என்பது பொருள் ! ஜெஹோவா சூவாஸ் என்ற எபிரேய பதமே சுருக்கமாக ஜீசஸ் ! கடவுள் விடுவிக்கிறார் !!

இம்மூவரும் ஒருவரே என்பதும் அவரே முருகனாக தமிழுக்கு போகரால் அரிமுகம் செய்யப்பட்டார் என்பதும் உண்மையாகும் !

இந்த யுக புருஷனின் உதவியாளர் ஒருவரும் உள்ளார் !

ராமனுக்கு லக்ஷுமனனும் ; கிருஷ்னருக்கு அர்ச்சுணனும் ; இயேசுவுக்கு முஹமதாகவும் அவர்கள் வந்தார்கள் !!

கீதை 4 :1 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : நான் இந்த அழிவற்ற விஞ்ஞானமாகிய யோகமுறைகளை ஆதியிலே மனிதர்களின் தகப்பனான மண்ணு /மணுவிற்கு உபதேசித்தேன் !!! அவர் தமது மகனான இஷ்வாகிற்கு உபதேசித்தார் !! 

கீதை 4 :2 இந்த உண்ணதமான விஞ்ஞானம் வழிவழியாக சீடர்களின் பாராம்பரியத்தால் பெறப்பட்டு; ராஜரிஷிகளாகிய அரசர்களால் உணர்ந்து கடைபிடிக்க பட்டு வந்தது! இருப்பினும் நாளடைவில் இந்த பாராம்பரியம் உடைந்து இன்றைய தினம் காணப்படுவது போல இந்த உண்ணதமான விஞ்ஞானம் அறியப்படாமலேயே போயிற்று!!!

கீதை 4 :3 உண்ணதமான கடவுளோடு இயைந்து ஒருமித்து வாழும் அந்த ஆதி கலையை இன்று நான் உனக்கு உபதேசிக்கிறேன்!!! ஏனென்றால் நீ எனது நண்பனும் சீடனும் அத்தோடு உயிரோட்டமுள்ள நித்திய ஞானத்தை உணர்ந்து கொள்ள தகுதியுள்ளவனுமாய் இருக்கிறாய்!!!

கீதை 4 :4 அர்ச்சுனன் கேட்டான்: தாங்கள் பிறந்திருப்பது இப்போது! அப்படியிருக்க ஆதியிலே இந்த விஞ்ஞானத்தை எப்படி மனுவிற்கு உபதேசித்தீர்கள்?

கீதை 4 :5 கிரிஷ்ணர் கூறினார்: நீயும் நானும் பலபிறவிகள் இப்பூமியில் வந்துள்ளோம்!! ஆனால் அவை பற்றிய உணர்வு உனக்கு அருளபடவில்லை!! எனக்கு மறைக்க படவில்லை!!!

நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்  

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 





திருப்புகழ் 567 !!


இந்தப்பிலேயரிலும் கேட்கலாம்

https://ia801505.us.archive.org/17/items/08Track8_20160731/08%20Track%208.ogg


பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே
உத்தமா தானசற் ...... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.



பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி


உன் மீதுள்ள பக்தியால் பல காலமாக உன்னை விடாது பற்றிக்கொண்டு மகத்தான திருப்புகழை பாடுகிறேன் !

முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே


நித்திய ஜீவன் உள்ள பெருவாழ்வு பெற்று கடவுளுடன் சேர்வதற்கு வழியை அருள்வாயே

உத்தமா தானசற் ...... குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா


உத்தமனே ! இரக்கமும் நற்குணமும் உள்ளோரை நேசிக்கிறவனே ! ஒப்பில்லாதா மாமணியே ! உயர்ந்த பரலோகத்தில் வாசமாயிருக்கிறவனே !

வித்தகா ஞானசத் ...... திநிபாதா
வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.

ஆற்றல் நிறைந்தவனே ! ஞானம் நிறைந்த பாதையை காட்டவல்லவனே ! அசுரர்களை வெல்லும் ஞான வேலை உடைய பெரியவனே ! குருவாக கடவுளால் அனுப்பபடுகிற இறைதூதனே!!



திருப்புகழ் 581


https://ia601505.us.archive.org/21/items/09Track9_201607/09%20Track%209.ogg

மாலாசை கோப மோயாதெ நாளு
     மாயா விகார ...... வழியேசெல்

மாபாவி காளி தானேனு நாத
     மாதா பிதாவு ...... மினிநீயே


ஆசை . கோபம் முதலான மாயைகள் மனிதனை ஓயாமல் வாட்டுவதால் பாவம் செய்கிற துர்க்குணம் உள்ளவனாக நான் இருந்தாலும் குருவே -- மாதாவும் பிதாவும் நீயே என உன்னை சரனடைகிறேன் ! .

நாலான வேத நூலாக மாதி
     நானோதி னேனு ...... மிலைவீணே

நாள்போய் விடாம லாறாறு மீதில்
     ஞானோப தேச ...... மருள்வாயே

நான்கு வேதங்கள் ஆகமங்கள் ஆதி நூல்களை நான் ஓதியதில்லை ; அப்படியே ஓதினாலும் ஞானம் உண்டாகாமல் வீனே நாள் போகிகிறது ! அப்படி வீனாகாமல் 36 தத்துவங்களையும் உள்வாங்கிய ஞானத்தை எனக்குள் விளைய வைப்பாயாக !

பாலா கலார ஆமோத லேப
     பாடீர வாக ...... அணிமீதே

பாதாள பூமி யாதார மீன
     பானீய மேலை ...... வயலூரா


இறைவனின் தூதனே ! சேற்றில் ஒட்டாத தாமரை போல ப்ற்றற்று உலகம் உடைமைகள் மீதும் அதுபோல பாதாளம் ; பூமி உள்ளடக்கிய இந்த பிரபஞ்சம் உற்பத்தி செய்யப்பட்ட போது அதற்கு ஆதாரமாக இருந்த ஆதி கங்கை என்ற ஜலத்தின் மீதும் சூழ்ந்து தேவ ஆவியாய் அசைவாடிக்கொண்டிருப்பவனே !

வேலா விராலி வாழ்வே சமூக
     வேதாள பூத ...... பதிசேயே

வீரா கடோர சூராரி யேசெ
     வேளே சுரேசர் ...... பெருமாளே.


ஞானத்தை உடையவனே ! பலவாய் விரவி ; பரவி அவைகளில் கலந்து இருப்பவனே ! ஜடங்கள் ; உயிரிணங்கள் அனைத்திற்கும் அதிபதியானவனே !  வீரனே ! கொடிய அசுரர்களை வெல்பவனே ! ஞானம் விளைந்த பக்தர்களை வழினடத்தும் இறைவனின் தூதனாகிய யுகபுருசனே !

திருப்புகழ்--635

https://ia601508.us.archive.org/15/items/07Track7_201607/07%20Track%207.ogg

அல்லில் நேரு மினது தானும்
அல்ல தாகிய உடல் மாயை
கல்லில் னேரஅ வழிதோறுங்
கையு நானு முலையலாமோ
சொல்லில் நேர்படு முதுசூரர்
தொய்ய வூர்கெட விடும்வேலா
வள்ளி மார் இருபுறமாக
வள்ளி யூருறை பெருமாளே.

இரவில் பளிச்சிடும் மின்னல் இல்லாமல் போய் விடுவதுபோல மிகப்பிரபலமாக தெரியும் இந்த உடல் மாயையாகும் ! அது இல்லாமல் போய்விடும் !
கற்கள் முற்கள் நிறைந்த உலகியல் வாழ்வை சாசுவதம் என்று நம்பி நான் அலைந்துதிரிவதோ ?
அசுரர்களின உபதேச சொல்லுக்கு இணங்கி பாவம் முற்றியவர்கள் அந்த பாவத்தின் பலனை சிட்சையாக அனுபவித்து தொய்வடைகிறார்கள்! அந்த பட்டறிவால் ஞானம் விளைந்து உமது சொல்லுக்கு நேர் படும்படியாக ஞானவேலை விடுகிறீர்கள் !
அதனால் உம்மை பற்றிக்கொண்டவர்கள் இருவகையினர் சதா உம்மை சூழ்ந்திருக்க பக்தர்களின் இதயத்தில் வாசமாயிருக்கும் யுக புருஸனே ! கடவுளால் படைக்க பட்ட அனைத்திற்கும் பெரியவரே ! சற்குருனாதரே !

அல்லில் நேரு மினது தானும்
அல்ல தாகிய உடல் மாயை
இரவில் பளிச்சிடும் மின்னல் மிகுந்த ஆற்றல் மிக்கதாக உள்ளது ! பலருக்கும் அது பிரபலமாக தெரிகிறது ! ஆனால் அது சில வினாடிகளில் இல்லாமல் போகிறது ! அப்படிப்பட்ட தன்மை உடையது மனித உடல் ! அது மிகுந்தசக்தி உள்ள புலன்களை கொண்டிருக்கிறது ! அழிக்க அதனால் முடிகிறது ! ஓரளவு ஆக்கவும் அதனால் முடிகிறது ! கடவுளின் படைப்புகள் அனைத்திலும் மேலானதாக மற்ற படைப்பினங்கள் அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த கூடியதாகவும் இருக்கிறது ! ஏதேனும் புதிய வியாதிகள் உண்டானாலும் சில நாளில் அதற்கும் மருந்து கண்டுபிடித்து கடவுளின் அவசியம் இல்லை என்பதாக நிலைனாட்டிக்கொள்ள பார்க்கிறது ! விஞ்ஞானம் பகுத்தறிவு என்று தத்துவங்களை உண்டாக்கி எல்லாவற்றிற்கும் விளக்கத்தையும் அதன் விதிமுறைகளையும் கண்டறிகிறது ! கடவுளின் பரலோகத்திற்கு நிகரான சொர்க்க பூமியாக இவ்வுலகை மாற்றி காண்பிக்க முயலுகிறது ! ஆனாலும் அந்த உடல் அழிவதை அந்த உடலால் தடுக்க இயலவில்லை ! உலகை கலக்கியவர்கள் பலர் இன்று இல்லாமல் போய் விட்டனர் ! உலகப்புகழ் பெற்று அபிமானிகளின் பலரின் பெரியபெரிய கூட்டத்தை உடையவர்களாக இருந்த பலர் இன்று மறக்கபட்டுவிட்டனர் ! உடல் அழியாமல் பாதுகாத்தால் ஒரு நாள் உயிரோடு வந்து விடுவாரோ என்று பிரமீடுகளை உருவாக்கி பாதுகாக்க பட்ட மம்மிகள் இன்றளவும் உயிரோடு எழும்ப முடியவில்லை என்பது நிரூபணமாகிவிட்டது ! அந்த உடல் மாயை !

கல்லில் னேரஅ வழிதோறுங்
கையு நானு முலையலாமோ
அதுதான் அப்படியென்றால் அது வாழும் பூவுலக வாழ்வு என்பது யாருக்கும் நிம்மதியளிப்பதாக இல்லை ! அந்த உடலை ஓம்பவும் அதன் சொந்தபந்தங்களின் கடமைகளை பராமரிக்கவும் பொருளீட்டல் என்ற கடமை அழுத்திக்கொண்டே உள்ளது ! அதுவுமல்லாமல் அத்தியாவசிய தேவைகளுக்கு மேலாக அந்த உடலின் இச்சைகள் பெருமைகளுக்காக இன்னும் என்னேன்னவோ செய்ய வேண்டியுள்ளது ! நல்லதையும் கெட்டதையும் செய்து தனக்கும் பிறருக்கும் கேடுகள் செய்து ; திருப்தியடையாமல் உழலவேண்டியுள்ளது ! அதனால் ஆத்துமாவில் --மெய்யாகிய நானில் பாவபுண்ணிய கணக்குகள் சேர்ந்து கடவுளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது ! பல பிறவிகள் எடுத்து துக்க சாகரத்தில் உழன்று தவிக்கவேண்டியுள்ளது ! அந்த ஊழில் உழலும் ஆத்துமா அதிலிருந்து விடுபட ஏது வழி ? பிறவிப்பெருங்கடலில் நான் தவிக்கிறவனாகவே இருப்பது உமது சித்தமா ?
இந்த கேள்வியை கேட்ட அருணகினாதர் ஆத்துமாக்கள் உய்வடைய கடவுள் வைத்துள்ள வழியின் ரகசியத்தையும் அடுத்து சொல்லுகிறார் !

சொல்லில் நேர்படு முதுசூரர்
தொய்ய வூர்கெட விடும்வேலா
புதிய ஆத்துமாக்கள் உடல்தான் நான் என்று கருதிக்கொண்டு அதன் இச்சைகளை பூர்த்தி செய்வதிலும் அதன் மஹிமையிலும் வீரதீர பிரதாபத்திலும் மஹிழ்ந்திருக்கும் ! பாவம் மிகாததனால் இன்னும் ஆணவம் , கண்மம் , மாயைகளின் வழியாக பல கெடும்பு செய்யும் ! அப்போது அதனை தூண்டிவிடுகிற அசுரர்களின் உபதேசத்தை கேட்டு இன்னும் அதன் பாவங்கள் முற்றவேண்டும் ! ``முது சூரர்`` என்ற வார்த்தை முற்றிய தீயவர்களாக ஆத்துமாக்கள் மாறும் நிலையடைவதை குறிக்கிறது ! பாவம் முற்றாத ஆத்துமாக்கள் நல் உபதேசங்களுக்கு உடன்பட மாட்டார்கள் ! ஆனால் தீய உபதேசங்களுக்கு உடன்படுவார்கள் ! ஆனால் பாவம் முற்றி விட்டாலோ அவர்கள் செய்த செயலுக்கு விளைவுகளை கடவுள் அனுப்பும் போதோ தொய்வடைகிறது ! துண்பத்திலிருந்து விடுபட அது இறைவனை நாட தொடங்குகிறது ! துன்பமே நிறைய ஆத்துமாக்கள் இறை சிந்தனை உள்ளவர்களாக மாற காரணமாக இருக்கிறது ! ஞான வேலானது முது சூரர் தொய்வடையும்படி எய்யப்படுகிறது ! அது அவர்களை வாட்டி வதக்கி பட்டறிவு என்ற ஞானத்தை ஆத்துமாவில் விளையவைக்கிறது ! இறைபயம் என்ற ஞானவித்து ஊண்றப்படுகிறது ! பக்தி என்ற மெய்ஞானம்-- தன்னை அறிதல் , நீதிபரராகிய கடவுளுக்கு கீழ்படிதல் என்பதாக அது படிபடியே பல பிறவிகளில் பெருகத்தொடங்குகிறது ! உடலின் இச்சைகளின் பின் செல்லாமல் அதனுடன் போராடத்தொடங்குகிறது ! அப்படி போராடி உடலின் பிடியிலிருந்து விடுபடவிடுபட ஒவ்வொரு மாயையிலிருந்தும் விடுபட்டு ஞானம் தழைத்தோங்குகிறது ! அப்படிபட்ட ஆத்துமாக்களே சொல்லில் நேர் படுகிற நிலையடைகிறார்கள் !
இங்கு அருணகினாதரின் சொந்த அனுபவமே உதாரணப்படலாம் ! செல்வச்சிறப்புள்ள குடும்பத்தில் பிறந்து பெண் இச்சைக்காக தனது செல்வமனைத்தையும் செலவழித்த பெண்பித்தர் ஒருவர் எப்படி ஒரே நாளில் எதிர்முனையாகிய ஞானத்திற்கு மாற முடியும் ? உடனே அதனை முருகனின் அற்புதம் ; திருவிளையாடல் என புளகாங்கிதம் அடைந்து பக்திபரவசம் அடைவதோடு நிருத்திக்கொள்ளக்கூடாது ! இன்றைக்கும் கோவில்களில் தற்கொலை பலர் செய்தார்களே அவர்கள் நிலை என்ன ? உண்மை என்னவென்றால் அருணகிரியாரின் ஆத்துமா முந்தய பிறவிகளில் பல மாயைகளை கடந்தாலும் பெண் இச்சை என்ற ஒன்றை மட்டும் கடறாதது ! அதனால் இப்பிறவியில் பெண் இச்சையிலிருந்து விடுபடுவதற்கு மட்டுமே பிறவியெடுத்தது ! அதனால் அதில் மூழ்கி திளைத்து ஒன்றுமேயில்லாததற்கே இவ்வளவு பாடுபாட்டோமா என வெறுப்படைந்து ; உணர்ந்து தன்னை மாய்த்துக்கொள்ளும் அளவு துனிந்த போது அது பாவமன்னிப்பாகவும் ; ஞான உபதேசமாகவும் அருளாகவும் கிடைக்கபெறுகிறது ! ஞானம் முழுமையடைந்து சித்தியடைகிறது ! அது பல பிறவிகளில் உண்டான வளர்ச்சி ! ஞானமுதிர்ச்சி ! அதுவே இந்த வரிகளில் சித்தரிக்கபடுகிறது ! இத்தகைய ஆத்துமாக்கள் எஞ்சிய நாட்களில் பிறருக்கு ஞான உபதேசம் செய்து உலகம் விழிப்படைய கடவுளால் பயன்படுத்தப்படுவார்கள் ! உபகுருக்கள் எனப்படுவோர் இத்தகையவர்களே ! சரியை என்ற தத்துவத்தில் இதுவே சூரன் ஞானவேல் துளைத்தவுடன் சேவலாக மாறிவிட்டான் எனப்படுவது ! ஞானம் துளைத்து அஞ்ஞானம் மறைந்தவர்கள் உலகை எழுப்பும் சேவலாக மாறிவிடுகிறார்கள் ! ஆனால் அவர்கள் சற்குருவுக்கு அடங்கி அவர்களின் காலில் நின்று சேவகம் செய்பவர்களே ! அல்லது சற்குருவால் பயன்படுத்தப்படுகிற பாத்திரங்களே !
இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல. (மத்தேயு 18:14)
அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். (மத்தேயு 5:45) -- என்பது சற்குருனாதர் இயேசுவின் வரிகள் !

வள்ளி மார் இருபுறமாக
வள்ளி யூருறை பெருமாளே.
``வள்ளி`` என்ற சொல் பற்றிபடறும் கொடியை குறிப்பதாகும் ! பாவங்கள் மிகுந்து துன்பம் பெருகும் போது இறைவனை நாடி அவரவர்கள் தரத்தில் மனித ஆத்துமாக்கள் இறைவனை பற்றிக்கொள்கின்றன ! வாயளவிலேனும் இறைபயம் என்ற சொல்லை பயன்படுத்துவதில் துவங்கி உண்மையிலேயே இறைபயம் உள்ளவர்களாய் ஆத்துமாக்கள் பரிணமிக்கின்றன ! அவர்கள் எல்லோரும் ``வள்ளிமார்களே`` கடவுளை நோக்கி திரும்பிய ஆத்துமாக்கள் அனைத்தும் வள்ளிமார்களே ! இவர்களின் தரத்தை பொருத்து இரண்டு வகையினராக பிரிக்கலாம் !ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஞானம் விளைந்து சுபாவத்தில் நற்குணங்கள் நிறம்பிய -- தெய்வீக இயல்பு அதிகரித்தவர்களை ``தெய்வானை`` என்பதாக பின்னாளில் சிறப்பளித்தார்கள் !ஆனால் ஆதிதமிழுலகமும் அருணகிரியாரும் வள்ளியைப்பற்றி மட்டுமே பேசுகின்றனர் ! இந்த வள்ளிமார்கள் சூழ்ந்திருக்க அவர்களுக்குள்ளேயே வாசமாயிருக்கிறார் ஒருவர் ! அவரே உலகின் சற்குருனாதர் ! அவரே இந்த லோகத்தின் யுகபுருஸன் ! படைக்கபட்ட அனைத்திற்கும் பெரியவர் ! பெருமாள் !
இந்த லோகம் கடவுளால் படைக்க பட்ட போது யார் மூலமாக படைக்க பட்டதோ அவரே யுகபுருஸன் ! பெருமாள் ! படைக்க பட்ட அனைத்தும் அவர் மூலமாகவே படைக்கபட்டது ! அவரே இந்த உலகின் சற்குருனாதராக இருந்து சகலரையும் கடவுளோடு கொண்டு சேர்க்கிறார் ! அதர்மம் பெருகும் போது யுகங்கள் தோறும் பூமிக்கு மனிதரூபத்தில் மாறி (முருகு) வருகிறவரும் அவரே ! அப்படி ராமராகவும் கிருஸ்ணராகவும் இயேசுவாகவும் வந்தவர் ஒருவரே !
அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.
அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. (யோவான் 1:2-11)
அவரையே முருகன் என்று தமிழுக்கு போகர் அறிமுகம் செய்தார் ! அவரே கந்தன் ! கந்தன் என்றால் நாம் பற்றிக்கோள்ள வேண்டியவர் -- பற்றுக்கோடு என்று பொருள் ! சமஸ்கிரத ஸ்கந்தபுராணத்தில் இவரே சற்குருனாதராக ``குரு கீதை `` என்ற படலமாக சிவனால் பார்வதிக்கு உபதேசிக்க பட்டுள்ளது ! இந்த குருவின் மூலமாக மட்டுமே மனுக்குலம் கடவுளை அடைய முடியும் என்பதே குருகீதையின் சாரம் !

http://kirubarp.blogspot.in/2014/05/2.html

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. (ஏசாயா 9:2 )



திருப்புகழ் -964

கலைமேவு ஞானப் பிரகாசக்
     கடலாடி ஆசைக் ...... கடலேறிப்

பலமாய வாதிற் பிறழாதே
     பதிஞான வாழ்வைத் ...... தருவாயே

மலைமேவு மாயக் குறமாதின்
     மனமேவு வாலக் ...... குமரேசா

சிலைவேட சேவற் கொடியோனே
     திருவாணி கூடற் ...... பெருமாளே.



சரியை , கிரியை ,யோகம் எனப்பட்ட கலைகளின் பயனாக விளைகிற ஞானத்தின் பிரகாசமே ! தாம் ஒருவரே மெய்ஞானமாகிய சற்குருனாதரே !
உமது ஞானகடலில் மூழ்கிதிளைப்பதால் மட்டுமே பொன்னாசை , பெண்ணாசை , மண்ணாசை என்ற மூவகை ஆசைக்கடலை கடரமுடியும் !
அவ்வாறு ஞானக்கடலாடும் போது பகுதி உண்மைகளை கண்டு மயங்கி தாங்கள் கண்டது மட்டுமே பெரியது என கருதிக்கொண்டு ஏனைய பகுதி உண்மைகளுடன் பலமாக சண்டையிடும் தர்க்கவியல்போதையில் நான் கவிழ்ந்துபோகாமல் முழுமையான ஞானத்தில் வளரும்படியாக கடவுளை சரணடையும் நிலையை தருவாயாக !
மலையே மூழ்கிவிடுமளவு விதவிதமான மாயைகள் குவிந்து கிடக்கும் பக்தர்களாகிய குறத்தியின் மனதிலே குடிகொண்டு சோர்ந்துபோகாமல் கடவுளுடன் ஐக்கியப்படுத்தும் சற்குருவே !
ஒவ்வொரு மாயையையும் கடறமுடியாமல் ஆத்துமாக்கள் தேங்கி சிலைபோல ஆகிவிடும்போது அந்த மாயையை வேட்டையாடி விழிப்படைய செய்யும் உபகுருக்கள் -- சேவல்கள் பலரை அணுப்பி பட்டறிவால் அருளும்ஞானமும் கூடும்படி செய்கிற யுகபுருஸனே ! படைக்கபட்ட எல்லாவற்றிற்கும் பெரியவரான பெருமாளே !
 


கலைமேவு ஞானப் பிரகாசக்
     கடலாடி ஆசைக் ...... கடலேறி


சரியை , கிரியை , யோகம் எனப்பட்ட கலைகளின் அப்பியாசத்தால் மட்டுமே அத்துமாவில் ஞானம் விளையமுடியும் ! அதற்கு ஆத்துமா பிறவியெடுத்து ஒரு சரீரத்தில் இருந்தால் மட்டுமே முடியும் ! ஆத்துமா மரணித்து நித்திரையில் பாதாளத்தில் இருக்கும்போது அதனால் ஞானத்தில் வளரமுடியாது ! அந்தளவில் உடலும் உயிரும் ஆத்துமாவுக்கு அவசியமாயிருக்கிறது ! பிறவிக்கடல் நீந்தினால்மட்டுமே ஆத்தும்மவில் உள்ள ``தான் தனது `` என்ற அகம்பாவம் நீங்க முடியும் ! ஒரு ஆத்துமா சுயத்தை வெறுமையாக்கி படைத்தவரின் கரத்தில் தன்னை ஒரு கருவியாக மட்டுமே ஒப்படைக்கிற நிலையே -- முழுசரணாகதியே பிறவாப்பெறு நிலை அல்லது ஜீவன்முக்தி எனப்படுவது ! அந்தனிலையில் ஒளியுடம்பு பெற்று உயிர் பிரியாமல் மரணத்தை வெண்ற நித்திய ஜீவனை ஆத்துமாக்கள் பெற்று பரலோக வாழ்வுக்குள் தேவதூதனாக மாறி நுழைய முடியும் ! அது இந்த லவ்கீகஉடம்பில் அடைவதல்ல ! இந்த உடலை வெல்லுவதால் அருளப்படுகிற ஒளியுடம்பு பெறுவதால் உண்டாவது ! இந்த லவ்கீக உடம்பு மட்டுமே ஆணாகவோபெண்ணாகவோ உள்ளது ! அதனால் பெண்ணாசை . பொன்னாசை . மண்ணாசை என்ற ஆசையால் நிறம்பபட்டதாக இருக்கிறது ! இந்த ஆசைகள் முற்றிலும் நீங்கி பரிசுத்தம் அடைந்தால் மட்டுமே மாசுமருவற்ற ஒளியுடம்பு தேகத்தை வள்ளலார் போல பெறமுடியும் ! அதற்கு இந்த உடம்பில் பூமிக்குரிய வாழ்வில் -- பிறவிப்பெருங்கடலில் நீந்தி ஆசைகடலை கடறவேண்டும் !

சரியை , கிரியை , யோகம் எனப்பட்ட கலைகளின் அப்பியாசத்தால் நம்முள் விளைகிற அரைகுறை ஞானத்தை கொண்டு ஞானமே பிரகாசமான யுகபுருஸன் -- சற்குருனாதரின்  முற்றறிவாகிய மெய்ஞானக்கடலில் ஆடப்பழகவேண்டும் !
பலமாய வாதிற் பிறழாதே
     பதிஞான வாழ்வைத் ...... தருவாயே


சரி ! அப்படி வாழ்வின் பட்டறிவால் ஞானமார்க்கத்தில் நுழைந்து விட்ட ஆத்துமாக்களுக்கு அடுத்து என்ன நடக்கிறது ! மனித சிற்றறிவால் விழைந்த ஞானமே அதி உண்ணதமானதைப்போல பிரமையை ஏற்படுத்துகிறது ! ஒவ்வொரு ஞானிகளும் - உபகுருக்களும் சொல்லிய விசயங்களே ஒரு சாதகனுக்கு எட்டாகணியாக உள்ளது ! அதை அப்பியாசித்து முழுமையடைவதே முடியாமலேயே போய் விடுகிறது ! அதை அப்பியாசித்து அணுபவம் பெறுதல் என்பது நடக்காமலேயே அதை அறிந்து கொண்டதற்கே ஒரு சுயபெருமை  மனிதனை பிடித்துக்கொள்ளுகிறது ! தான் கொண்ட ஒரு குரு மார்க்கத்தை அணுபவத்தில் அப்பியாசிக்கும் போது நாம் எத்தனை முறை வழுக்கிவழுக்கி விழுகிறோம் என்பதை அனுபவப்பட்ட ஆத்துமா அறிவதற்கும் உள்விளைந்த ஞானத்திற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை கண்டுணர்ந்து ``மனத்தாழ்மை`` பொறுமை, சாந்தம் என்ற தெய்வீக குணத்தை அடையும் !

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். (மத்தேயு 11:29 ) என்பது யுகபுருஷன் இயேசுவின் வெளிப்பாடு ! 
அப்போது எதையும் கிரகிக்கிர -- உள்வாங்கும் இயல்பு உண்டாகும் ! அப்படியில்லாமல் அறிந்து கொண்டதற்கே சுயபெருமை பாராட்டுகிற நபர்கள் தாங்கள் தெரிந்துவைத்திருப்பதை மட்டுமே துருத்திக்கொண்டு திரிவார்கள் ! அடுத்தவர் அணுபவத்தை உள்வாங்க மாட்டார்கள் ! அதனால் நான் சொல்லுவதுதான் பெருசு நீ சொல்லுவது சிறுசு என மார்க்கபேதங்கள் உண்டாகி சண்டைசச்சரவுகள் செய்து மண்டையையும் உடைப்பார்கள் !

உதாரணமாக இன்றைய காலகட்டத்தில் `` இந்து மதம் `` என்ற அளவில் சைவம் வைணவம் என்ற பேதங்களை அங்கீகரித்துக்கொள்ளும் அல்லது பெரிது படுத்தாத சூழ்னிலை வந்துவிட்டது ! ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சைவமா வைணவமா என்பதற்கு சண்டைசச்சரவுகள் செய்து பலரை கொண்றார்கள் ! ரத்த ஆறை ஓட விட்டார்கள் ! தசாவதரம் என்ற சிணிமாவில் கூட சிவபக்தனான மன்னன் ஒருவன் மனைவிமக்கள் கதறி அழுதபோதும் விடாமல் ஒரு வைணவ பட்டரை கொண்ற ஒரு பாடல் பிரபலமாய் வந்தது ! அடுத்த நூற்றாண்டுகளில் வேற்றுமையை அங்கீகரிக்கப்போகிற ஒரு சமுதாயத்தில் எதற்காக பலரை கொண்றார்கள் ? இன்றைக்கும் வேற்றுமையை அங்கீகரிக்காத மத தீவிரவாதிகள் ஒருவரை ஒருவர் கொண்று கொண்டுதான் உள்ளனர் ! அதுவும் கடவுளுக்காக பிறரை கொல்லுவதாகவும் அதற்கு சொர்க்கம் பரிசாக கிடைக்கபோவதாகவும் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்வது எவ்வளவு அஞ்ஞானம் பாருங்கள் !

கடவுளை அடைகிற பாதையில் மெய்ஞானத்தை எட்டுகிற வளர்ச்சியில் ஒரு சிறு ஞானம் கிடைத்தாலும் அதன் பிறகும் விடவேண்டிய அஞ்ஞானங்கள் எத்தனை எத்தனை ? கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக நமது ஆத்துமாவிலிருந்து இன்னும் எத்தனை தீய இயல்புகள் வெளிப்படும் ? ஞான வளர்ச்சியில் பக்குவப்பட்ட ஆத்துமாவுக்கு `` பலமாகிய வாது -- பல மாயமாகிய வாதுகளை `` கடந்து நீடிய பொறுமை சாந்தம் சித்திக்கும் ! தான் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதும் ; மனித முயற்சியால் ஒவ்வொன்றையும் வெல்லுவது சுலபமல்ல என்கிற நிதானமும் . கடவுளையே கதி என சரணடையும் `` பதிஞான வாழ்வும் `` சித்திக்கும் ! அந்த சரணாகதியை தருகிறவர் சற்குருனாதரே !

மலைமேவு மாயக் குறமாதின்
     மனமேவு வாலக் ...... குமரேசா


மனித ஆத்துமாவில் உண்டாகிற விதவிதமான மாய்மாலங்கள் சாக்குபோக்குகள் கடும்பற்றுகள் கோபதாபங்களின் அளவை சொல்லிமாளமுடுயுமா ? அது பெரிய மலையையே மூடக்கூடியது ! பரிசுத்தம் என்பது ஒரு பிறவியில் அல்லது சில பிறவியில் எட்டக்கூடியதல்ல ! எவ்வளவோ வளர்ந்த நபரிடமிருந்து சந்தர்ப்பம் வாய்த்தவுடன் தீமை பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது ! கலியுக முடிவில் நியாயத்தீர்ப்பு நாளன்று முடிந்த அளவு தங்களோடு மனித ஆத்துமாக்கள் அழிக்க படவேண்டும் என்பதில் அசுர சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன ! அவை மனிதனுக்குள் உள்ள ஒரு சின்ன தீய விசயத்தையும் அதற்குரிய சந்தர்ப்ப சூழ்னிலையை உருவாக்கி ஊக்குவித்து விடுகின்றன ! ஆனாலும் தவறுகளுக்கு மனித ஆத்துமாக்கள் மட்டும் காரணமல்ல என்பதால் இறைபயம் உள்ளார்ந்த பக்தி என்ற ஒன்றுமட்டும் இருந்தால் போதுமானது ! எவ்வளவு கீழான இயல்புள்ள ஆத்துமாவையும் அதன் பக்தி காரணமாக நேசிக்கிற -- விடாமுயற்சியுள்ள சலிப்படையாத சற்குருனாதர் கடவுளின் பிரதினிதியாக இருந்து நம்மை தேற்றுகிறார் ! ஆத்துமாக்கள் அழிவுக்குள்ளாகதபடி ``சதிபதி`` பாசமானது பரமாத்துமாவால் நம் மீது வெளிப்படுத்தப்படுகிறது !  

(மாற்கு 10:27) இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; கடவுளால் இது கூடாததல்ல; கடவுளாலே எல்லாம் கூடும் என்றார்.! 

சிலைவேட சேவற் கொடியோனே
     திருவாணி கூடற் ...... பெருமாளே.


ஆத்துமா ஞானவளர்ச்சி அடையும்போது ஒன்றை விட்டால் இன்னொன்று வெளிப்பட்டு பூதகரமாய் அழுத்திக்கொள்ளுகிறது ! சூரனை அழிக்க அழிக்க அவன் இன்னொரு வேடமெடுத்துவிடுகிறான் என்பது அதுவே ! ஒவ்வொரு மாயையையும் வெளிப்பட்ட உடன் அதிலிருந்து விடுபடமுடியாமல் ஆத்துமா அதனால் பீடிக்கபட்டு தேங்கி விடுகிறது !இந்த தேக்கனிலைமை சிலையைப்போன்றது ! ஒரு சிலை என்பதும் பாடுபாட்டு செதுக்கியே உருவாக்குகிறார்கள் ! அதன் பிறகோ அது வைத்த இடத்தில் அப்படியே நின்றுகிடக்கிறது ! பாடுபட்டு வளர்ந்த ஆத்துமா மீண்டும் ஒரு தேக்கத்தில் போய் மாட்டிக்கொள்ளுகிறது ! இந்த சிலை தண்மையை வேட்டையாடுவதற்கென்றே பல உபகுருனாதர்களான சேவல்களை -- நன்மையோ தீமையோ செய்து நமக்கு படிப்பினை உண்டாக்குகிற சேவல்கள் பல சற்குருவால் அணுப்பபட்டு கொண்டே இருக்கிறது ! ஆத்துமாக்களை விழிப்படைய செய்தல் என்பதை பறை சாற்றூவதே சேவல் கொடியாகும் ! அப்படிப்பட்ட தேற்றுகிற பணியால் நமது ஆத்துமாவில் கடவுளின் அருளும் எத்தனை பிறவியெடுத்தாலும் மாறாமல் ஆணியாக அறையப்பட்ட ஞானமும் கூடிகூடி பெருகிவரும்படியாக யுகபுருஸணானவர் பார்த்துக்கொள்ளுகிறார் !

திருப்புகழ் - 13

சந்ததம் பந்தத் ...... தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே

கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
     சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா

செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.


அடுத்ததடுத்து பிறவியெடுத்து ஆத்துமா அடுக்குஅடுக்காக சேர்த்துக்கொண்ட கர்மத்தொடரால் இப்பிறவியில் உண்டாகிற விளைவுகளை சகிக்கமுடியாமல் என்ன செய்தேனோ என சஞ்சலத்தில் அலைகிற நான் அதிலிருந்து கடைதேற்றுகிற பற்றுகோடு -- ரட்சகர் நீர் என்பதை உணர்ந்து உம்மீது பக்தி கொண்டு கீழ்படியமட்டேனா ?

இசைந்து வாழும் பக்தர்களில் சிறந்த நற்குணமுள்ளோருடன் இரண்டற கலந்திருப்பவனே ! சரீரமாய் வாழ்கின்ற மனிதர்களை கடைதேற்ற மனிதனாகவே சரீரத்தில் வருகிற இறைதூதா ! சரீரத்தால்; அசுரர்களால் உண்டாகிற மகாமாயை கண்டித்து அழிக்கிற ஞானவேலையுடையவனே ! மனு குலத்தில் பரலோகத்திற்கான தகுதியுடையோரின் சற்குருனாதரே ! யுக புருஷனே !

சந்ததம் பந்தத் ...... தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே


சந்ததம் என்பது அடுக்குஅடுக்காக அடுத்தடுத்து ஒரு விசயத்தை சிறப்புபடுத்தி பேசப்படும் வாக்கியங்களகும் ! இலக்கியத்திலும் மக்களின் மனங்களிலும் ஆழ்ந்து ஈர்ப்பை உண்டாக்க கூடியது ! அறிஞர் அண்ணாவால் மக்களின் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை சந்தத்தொடரால் உண்டாக்க முடிந்தது எனபது மட்டுமல்ல இந்தியாவில் ஒரு பெரும் அரசியல் சக்தியாக திராவிட இயக்கத்தை கட்டி எழுப்பமுடிந்தது ! பேச்சு திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டு பலரை ; அரசியல் தொழிலால் பணக்காரர்களாக்கிய பெருமை இந்த சந்ததத்திற்குண்டு !

அப்பேர்பட்ட வல்லமையான கர்மப்பதிவுகள் பிறவித்தொடரில் அடுக்கடுக்காக ஆத்துமாவில் பெருகுகின்றன ! பாவம் முற்றும்போதோ அதன் விளைவுகள் இப்பிறவியில் வாட்டி வதக்கி சஞ்சலத்தை உண்டாக்குகின்றன 1 அதனால் என்ன செய்தேனோ என்ன செய்தேனோ என முக்கிக்கொண்டும் முனகிக்கொண்டும் துக்கசாகரத்தில் பலர் திரியும்படி நேரிடுகிறது ! கெட்டகாலே கெடும் பட்டகுடியே படும் என பல குடும்பங்கள் இறங்குமுகத்திலேயே தவிக்கின்றன !

கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ


அவ்வாறு தவிக்கிறவர்களை கண்கொண்டுபாராமல் பதிலுக்குபதில் வாட்டிவதக்குபவராக மட்டுமே கடவுள் இருப்பதில்லை ! அவர் நீதிபரர் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு அவர் கிருபையுள்ளவர் என்பதும் உண்மை !

எரேமியா என்றொரு யூத பக்தர் - கடவுளை நெருங்கியவர் -- இஸ்ரவேல் நாட்டவர்கள் துன்மார்க்கமாய் நடந்த போது கடவுளின் தண்டனை வரப்போகிறது என கடவுளின் வாயாக இருந்து எச்சரித்தவர் ! அப்படி எச்சரித்ததால் ஜனங்களால் கடும் துண்பத்திற்கு ஆளானவர் ! நெபுகாத்னேசர் என்பவர் பாபிலோனிய பேரரசனாக மாறி இஸ்ரவேலை கைப்பற்றி அதனை அழித்து ஜனங்களை அடிமைகளாக கொண்டுபோகப்போகிறான் ; மனம் திரும்பிவிடுங்கள் என்று மன்றாடிய அவரை `` நீ என்ன தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் `` என்று இஸ்ரவேல் ராஜாவால் பாதாளசிறையிலிடப்பட்டவர் ! ஆனால் அவர் எச்சரித்தது போல இஸ்ரவேலை பாபிலோன் படைகள் கைப்பற்றி தீக்கிரையாக்கிற்று ! அழிவு வந்தபிறகும் எரேமியா கடவுளீடம் புலம்பிய பாடல்கள் யூத வேத நூலான தவ்ராத்தில் `` புலம்பல் `` என்றொரு புத்தகமாக உள்ளது ! அதிலிருந்து சிலபகுதிகளை கவணியுங்கள் !

புலம்பல் : 3 அதிகாரம்

    1. கடவுளுடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்டபுருஷன் நான்.

    2. அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.

    3. அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.

    4. என் சதையையும் என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.

    5. அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார்.

    6. பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.

    7. நான் புறப்படக் கூடாதபடி என்னைச் சூழவேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார்.

    8. நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.

    9. வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.

    10. அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.

    11. என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பாழாக்கிவிட்டார்.

    12. தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.

    13. தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்.

    14. நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்.

    15. கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.

    16. அவர் பருக்கைக் கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.

    17. என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.

    18. என் பெலனும் நான் கடவுளுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.

ஆனால் கடவுளின் கிருபையை உணர்ந்த அவர் இஸ்ரவேல் ரட்சிக்கப்படும் என்ற தனது நம்பிக்கையை அடுத்து வெளிப்படுத்துகிறார் !

21. இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.

22. நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கடவுளுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

23. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

24. கடவுள் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.

25. தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கடவுள் நல்லவர்.

26. கடவுளுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

27. தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.

28. அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மௌனமாயிருக்கக்கடவன்.

29. நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.

30. தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.

31. கடவுள் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.

32. அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.

33. அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.

34. ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் யாவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,

35. உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,

36. மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், கடவுள் காணாதிருப்பாரோ?

37. கடவுள் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?

38. உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?

39. உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?

40. நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கடவுளிடத்தில் திரும்பக்கடவோம்.

41. நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.

42. நாங்கள் துரோகஞ்செய்து, கலகம் பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.

43. தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின் தொடர்ந்து கொன்றீர்.

44. ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.

45. ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.

46. எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள்.

47. திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது.

தேசியப்பேரழிவு என சொல்லத்தக்கதாக இஸ்ரவேல் தேசம் பாபிலோனிய பேரரசால் தீக்கிறையாக்கபட்டது ! ஆனாலும் கடவுளை நெருங்கிய ஒரேஒரு அடியவர் புலம்பியதற்காக அந்த நாட்டிற்கு விடுதலையை கடவுள் அவருக்கு தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தினார் ! வாக்களித்ததுபோலவே செய்தும் கொடுத்தார் !

``பணமில்லாமல் விற்கப்பட்டீர்கள் ; விலையில்லாமல் திரும்ப கொண்டுவரப்படுவீர்கள் `` கோரேஷ் என்றொரு ராஜாவை எழுப்புவேன் ! அவன் உங்களை விடுதலயாக்கி அணுப்பிவிடுவான் என 5 தலைமுறைக்கு பிந்தய ராஜாவைப்பற்றி தீர்க்கதரிசனம் இறங்கிற்று !

26. நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர்.
28. கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான். (ஏசாயா :44 அதிகாரம்)


துக்கமும்துயரமும் சஞ்சலமும் நிறைந்தோர் கிணற்றுக்குள் விழுந்தவர்கள் போல ! குய்யோமுறையோ என கூக்குரலிடுவார்கள் அல்லது பக்தி செய்வார்களே தவிற அதிலிருந்து மீண்டெழுகிற வழியை அவர்களாக சிந்திக்க இயலாது ! அவர்களை ரட்சிக்கிற -- மீட்கிற ஒருவர் இருக்கிற இடத்திலிருந்து ஒரு படி மேலே இழுத்துவிட வேண்டும் ! அந்தப்பணியே ``கந்து`` எனப்படுவது !

வட்டிக்கும் கந்து வட்டிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது ?

துக்கமும்துயரமும் சஞ்சலமும் நிறைந்தோர் கிணற்றுக்குள் விழுந்தவர்கள் குய்யோமுறையோ என கூக்குரலிடுவார்கள் அல்லது பக்தி செய்வார்களே தவிற அதிலிருந்து மீண்டெழுகிற வழியை அவர்களாக சிந்திக்க இயலாது !

அவர்களை ரட்சிக்கிற -- மீட்கிற ஒருவர் இருக்கிற இடத்திலிருந்து ஒரு படி மேலே இழுத்துவிட வேண்டும் ! அந்தப்பணியே ``கந்து`` எனப்படுவது !

வட்டிக்கும் கந்து வட்டிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது ?

ஒரு பெரிய தொகையை ஏதாவது அடைமாணத்தின் பேரில் கொடுத்துவிட்டு அசலை அடைக்கும்வரை மாதாமாதம் வட்டி வசூலித்துக்கொண்டிருப்பார்கள் . அது வட்டி கடன் . அசல் கழியாது

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வட்டியும் முதலும் சேர்த்து அடைக்கும் படியாக ஒரு கணக்கில் அசலும் தீர்ந்துவிடும்  என்பது கந்து வட்டி கடன் !

ஒரு சிறு தொகையை அடைமாணமில்லாமல் கொடுத்துவிட்டு அதை தினம் தினம் அளவான சக்திக்கு உட்பட்ட தொகையாக திரும்ப பெற்றுக்கொள்ளும் உதவியாக ஏழைகளுக்கு உதவும் முறையை `` கந்து`` என்று முஸ்லீம் சமுதாயத்தில் அறிமுகம் செய்யப்பட்டது !   எதையும் கலப்படம் செய்தே பழகிய மனிதர்கள் ஈரை பேணாக்கி ஈகை என்ற நோக்கில் உருவாக்கபட்ட கந்தை கந்துவட்டி கொடுமையாக்கி விட்டனர் !

கந்து பணியை - ரட்சிக்கிற வேலையை யார் செய்ய தகுதியானவர் ? இந்த பிரபஞ்சம் யார் மூலமாக கடவுளால் படைக்கபட்டதோ ; இப்பிரபஞ்சத்தை கடவுளின் பிரதினிதியாக இருந்து ஆளுகை செய்கிற யுகபுருஷனே அதற்குரியவர் ! அவர் திரேதா யுகத்தில் ராமராகவும் ; துவாபர யுகத்தில் கிருஸ்ணராகவும் அவதரித்து அசுரர்களையும் அவர்களால் பலம் கொடுக்கபட்டவர்களையும் அழித்தார் ! கலியுகத்தில் அசுரர்களுக்கு ஆளுகை ஒப்படைக்க பட்டுள்ளது ! மனித சிந்தையை ஆளுகை செய்து அவர்களை தீமைக்குள் வழி நடத்தும் அதிகாரம் அவர்களுக்கு ஒப்புகொடுக்கபட்டுள்ளது ! ஆகையால் அவர்களால் வழிதப்பிபோபவர்களை ரட்சிக்கும்படியாக அத்ற்குரிய விலையை தாமே செலுத்த அவரே இயேசுவாகவும் அவதரித்தார் ! இஸ்ரேலிலே இயேசு அவதரிக்கும் முன் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் ``ஏசாயா `` என்றொரு தீர்க்கதரிசி இருந்தார் ! அவர் மூலமாக முன்னறிவிக்கபட்டதை பாருங்கள் :

3. அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் கடவுளால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கடவுளோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

7. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

10. கடவுளோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கடவுளுக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன் !

பின்னாளில் இயேசுவும் தனது பணியை குறிப்பிடும்போது :

(மத்தேயு 9:13) பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
(லூக்கா 15:7) மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.


முற்பிறவிகளின் கர்மவிணைகளாலும் ; இப்பிறவியின் முன்னோர்களின் கர்மவிணைகளாலும் ஒரு மனிதன் பீடிக்கபடும் போது யுகபுருஷன் மூலமாக கடவுளிடம் மண்ணிப்பு கோரி நல்லறிவு கொடுக்கும்படியாக வேண்டுதல் வேண்டும் ! அதுதான் சற்குருவின் குருத்துவ பணி -- கந்து , ரட்சிப்பு , மீட்பு என்பது ! இதை மதம் மாறுவது என்று சடங்காச்சாரமாக விளக்கம் கொடுத்து குழப்பத்தை உண்டாக்குகின்றனர் ! சற்குருவாகிய -- முருகனாகிய ராமராகிய கிருஸ்ணராகிய இயேசுவாகிய யுகபுருஷன் யார் மூலமாகவேனும் கடவுளை சரணடைந்து வேண்டுதல் செய்யவேண்டும் ! ரட்சிப்பு கிடைக்கும் ! வழிகாட்டுதல் உண்டாகும் ! தன்னை உணர்ந்து ஞானம் உண்டாகி தவறுகளிலிருந்து விடுபடும் பரிசுத்தம் உண்டாகும் !

குரு இல்லாத வித்தை பாழ் என்பார்கள் ! கடவுளை குருவின் மூலமாக சரணடைவதும் வேண்டுவதுமே சரியானது ! அந்த குரு -- கந்தன் யார் என்பதை கண்டுகொள்ளூகிற மெய்யறிவு வரப்பிரசாதமாகும் ! அந்த பேறு இதை வாசிப்போருக்கு உண்டாக ஏக இறைவன் அருள்புரிவாராக !

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
     சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா


தந்தி என்பது நரம்புகளை கொண்டு சுரங்களை எழுப்பி ஒத்திசைந்து இசையை படைக்கும் கருவிகளை உள்ளடக்கியது !இசைந்து இசையை மெருகேற்றுபவை இவ்வகைகருவிகள் ! அவ்வாறு கடவுளோடும் அவரது யுகபுருஷனோடும் அவரது சேவல்களான உபகுருக்களோடும் இசைந்து பூமியில் பரலோக ராஜ்ஜியத்தின் வித்துக்களாக வாழும் ஆத்துமாக்களே தந்தியின் கொம்புகளாகும் ! இறைபேரரசு இவர்கள் மூலமாக பூமியில் தளங்களை அமைத்துக்கொள்ளுகிறது ! இவர்களோடு இவர்களுக்குள் கந்தன் ஆத்துமாவில் இரண்டற கலந்துள்ளார் ! அதே நேரத்தில் சரீரம் என்ற அளவில் யுகங்கள் தோரும் மனித சரீரத்திலும் ராமராக , கிருஸ்ணராக , இயேசுவாகவும் வந்துள்ளார் ! இயேசு அவரின் வாயால் தன்னை பலமுறை மனுஷகுமாரன் என்று சொல்லியிருக்கிறார் !

(மத்தேயு 20:28) அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார்.
மத்தேயு 9:6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.

 
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.

செந்தில் என்பது மாயைகளின் தொகுதியாகும் ! அசுரர்கள் உருவாக்கும் பலவகையான மாய்மாலங்கள் செந்திலாக மனித ஆத்துமாக்களை மூழ்கடிக்கிறது ! இந்த செந்தில்கள் பலவற்றை கொண்டு அசுரர்கள் கிரெவ்ஞ்ச மலையை அமைத்து தங்கள் ராஜ்ஜியத்தை பாதுகாக்கிறார்கள் ! அதை தமது ஞானவேலால் முருகன் சிதறடித்தார் என்பது சரியை தத்துவம் ! திருச்செந்தூரில் கடற்கரையில் லேசான பொக்கு பாறையால் ஒரு சிறுமலை இருக்கும் ! அதுதான் செந்தில் எனப்படுவது ! அதற்குள் உள்ள ஒடுகலான குகையில் வள்ளி கோவிலிருக்கும் ! மகாமாயைக்குள்ளே பக்தர்களான வள்ளிகள் எப்போதும் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதே அதன் வெளிபாடாகும் ! ஆனாலும் செந்திலை கண்டிக்கும் ஞானமாகிய வேலின் கதிர்கள் கந்தனிடமிருந்து வள்ளிகளை கடைத்தேற்றுகிறது !

ஞானம் , அருள் , பரலோகம் என்பது வடக்காக குறிக்கபடுவதைப்போல மனிதர்கள் , பூமி தெற்காக குறிக்கபடுகிறது ! அந்த பூமியில் பரலோகராஜ்ஜியத்தின் வித்துக்களாய் மாறியவர்கள் மேல்னோக்கி உயர்ந்த குன்றுகளாகும் ! அந்த ஆத்துமாக்களுடன் அவர்களுக்கு தலைவராய் - சற்குருவாய் யுகபுருஷன் உள்ளார் ! அதுவே குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதாகும் !

கந்தனை அறிந்து கொள்வதற்கும் சற்குருவாய் ஏற்றுகொள்ளவும் ஆத்துமாகளுக்கு -- மனிதர்களுக்கு மதம் ஒரு தடையாய் இல்லை ! சற்குருவின் ஒரு அவதாரத்தை பின்பற்றுவதாக சொல்லிகொள்ளூம் மனிதர்கள் தங்களின் பக்தியை புழகாங்கிதப்படுத்தி மற்ற மார்க்கங்களை அவரின் அடுத்த அவதாரத்தை குறைத்துபேசும் மனித அஞ்ஞானத்தை வெளிகாட்டுகின்றனர் ! ஞானத்தின் மீது அஞ்ஞானத்தை புணைந்து மதபேதம் என்ற இருளுக்குள் விழுந்துள்ளனர் ! கடவுள் தமது பேரருளால் ஞானத்தை நம் மீது பிரகாசிக்க செய்வாராக ! 


  (திருக்குர்ஆன் 4:150.) நிச்சயமாக கடவுளையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், கடவுளுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, "நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்" என்று கூறுகின்றனர்; (நிராகரிப்புக்கும் நம்பிக்கைக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
4:152. யார் கடவுளின் மீதும் அவன் தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை கடவுள் அவர்களுக்குக் கொடுப்பான்; கடவுள் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.